Tuesday, December 9, 2008

அருணாசலம் (பாலு அண்ணா )

தாத்தாவும் நானும்

நான் எட்டாவது வகுப்பிலிருந்து, படிப்பைத் தொடர சென்னைக்கு அழைத்து வரப்பட்டேன். தாத்தா என்னை மிகவும் பிரபலமான ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். சென்னைக்கு வருவதற்கு முன், நான் விடுமுறைகளில் தாத்தா இருக்கும் இடத்திற்கு செல்லுவது வழக்கம். அவர் கடைசியாக, ஓய்வு பெறுவதற்கு முன் பணி புரிந்த இடமான இடும்பாவனம் எனக்கு ஓரளவிற்கு ஞாபகம் இருக்கிறது. மாட்டு வண்டிப் பயனம், அந்தக் கோவில், அங்கிருந்த குளம், அதில் ஒரு தடவை குளிக்கும் போது நான் தவறி விழுந்த சம்பவம், முதல் முறையாக பார்த்த நூறு ரூபாய் நோட்டு ஞாபகம் இருக்கிறது. ஆனாலும் மாமாவிற்கும் சித்திகளுக்கும் நன்றாக ஞாபகம் இருக்கும். பின்னால் அவர்கள் எழுதும்போது விவரிக்கலாம். பேரன் பேத்திகளிடையே எனக்கொரு தனியிடம் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. அது, அவர்கூடவே நான் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலத்தைக் கழித்தாகக்கூட இருக்கலாம்.
அவருடைய கண்டிப்பு, நேரம் தவறாமை யாவரும் அறிந்ததே. அதே சமயம் அவருக்கு எல்லேர் மேலும் பாசமதிகம். அவருக்கு வீட்டில் எந்தப் பொருளாக இருந்தாலும் அதனதன் இடத்திலே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கோபம் வந்துவிடும். அதேபோல் காலையில் அவரே கறிகாய் வாங்கி வருவார். தக்காளி ரசம் கண்டிப்பாக வேண்டும். பாலுசேரியில் பணி புரிந்த சமயம் காலை 8.15 மணிக்கு சாப்பிட தயாராகிவிடுவார். அவருடன் நாங்களும் உட்கார்ந்து விடவேண்டும். சாப்பிடும் போது அதிகம் பேசவோ, ஏதாவது புத்தகம் படிக்கவோ கூடாது. அது விஞ்ஞான ரீதியில் எவ்வளவு சரியென்று பின்னே புரிந்தது. ஆனாலும் நாங்கள் திருந்தப் போவதில்லை. புத்தகத்திற்குப் பதிலாக இப்பொழுது டி.வி.
ஒரு சமயம் நான் வசமாக மாட்டிக் கொண்டது சுவாரசியமான விஷயம். ஏதோ ஒர சாக்குபோக்குச் சொல்லி நான் காலையில் அவருடன் சாப்பிடவில்லை. மதிய உணவிற்கு அவர் அலுவலகத்திலிருந்து வந்திருந்தார். அன்று எலுமிச்சை சாதம் என நினைக்கிறேன். நானும் அவருடன் சாப்பிடும் போது முள்ளங்கி சாம்பார் பரிமாறப்பட்டது. எனக்கு முள்ளங்கி சாம்பார் என்றால் ரொம்ப இஷ்டம். நான் அசட்டுத்தனமாக பாட்டியிடம் "ஹை! முள்ளங்கி சாம்பாரா பாட்டி" என்று கேட்டுவிட்டேன். அப்பொழுது அவர் பார்த்த பார்வை .....இன்றும் எல்லோரும் ஏதாவது விசேஷத்தில் கூடியிருக்கும்போது இந்த சம்பவத்தை சொல்லிச் சிரிக்காமல் இருந்ததில்லை.
நாங்கள் பார்த்தசாரதி நாயுடு தெருவில் குடியிருந்தபோது, யாராவது எங்களுக்குப் போன் செய்யவேண்டும் என்றல் எதிரிலிருந்த கடைக்கு.(சேகர் ஸ்டோர்ஸ்) செய்வார்கள்.தொலைபேசி வந்தால் எப்படிப் பேசவேண்டும் என்றுகூட தெரியாத பருவம் ஆனாலும் ஏதாவது போன் என்று கடைப்பையன் கூப்பிட்டால் நான் முந்திரிக்கொட்டையாக ஓடுவேன். ஒருமுறை, அதுபோல் பேசிவிட்டு வந்து வீட்டில் சொன்னேன்.
" யாரோ முருவாம், தாத்தா பாட்டியை ஆபீஸ் ரூமுக்கு வரச்சொன்னார்.."
இது என்ன சங்கேத மொழி ? இங்கே External Affairs Ministry யில் Cypher Section என்ற பிரிவில் இப்படித்தான் கோட் வேர்டில் கடிதம் எழுதுவார்கள். அந்த வகையில் நான் மேலே சொன்ன விஷயம் இதுதான்.. குரு மாமா ஆயுஷ்ஹோமத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தவிஷயத்தை சொதப்பியது என் புத்திசாலித்தனம்.
பாட்டி தாத்தாவிடம் பேசுவதே வித்தியாசமாக இருக்கும். செய்யட்டும், போகட்டும், வரட்டும் என வார்த்தைகளில் முடியும். பாட்டியின் பொறுமை, தாத்தாவின் வேகத்திற்கு ஈடுகொடுத்தது. தாத்தாவிற்கு அரசாங்கத்திலிருந்து ஓய்வு பெற்றபின்புதான் நிறைய கடமைகள் செய்யவேண்டியிருந்தது. தன்னுடைய அரசாங்க உத்யோகம் முலம் அவர் கடவுளுக்கு செய்த சேவை, அவர் தன் கடமைகளை ஓய்வு பெற்றபின்பு நிறைவேற்ற காரணமாக இருந்தது எனச் சொல்லலாம். கடவுள் என்றும் நேரடியாக வந்து உதவி செய்வதில்லை. யார்முலமாகவாவது அவருடைய உதவி வந்து சேரும். அதுதான் கடவுள் கிருபை. அவர். ஓய்வுபெற்றபோது நான்கு பெண்கள் கல்யாணத்திற்கு இருந்தார்கள். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. அதற்க்கா கடவுள் அனுப்பிய நபர். சீனு சித்தப்பா. உறவில் மாப்பிள்ளையானாலும் தாத்தாவிற்கு முதல் பையனாக இருந்து நடத்திக்கொடுத்த காரியங்கள் ஏராளம்.
என்னுடைய கல்யாணம் திருச்சியில் நடந்தது. ஆனால், சென்னையே அங்கு வந்துவிட்டது. அது நான் செய்த பாக்கியம். இன்றும் தாத்தா பாட்டி காலத்திற்குப்பிறகும் எனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் சித்தி சித்தப்பாக்கள், மாமா மாமி உடன் இருக்கிறார்கள் அது தாத்தா எனக்கு செய்த ஆசீர்வாதம்.
என் முதல்பெண் வைஷ்ணவி பிறந்து டெல்லி வரும் வழியில் என் மனைவி, குழந்தையை தாத்தாவிடம் காண்பித்த அந்த தருணத்தை இன்றும் சிலிர்ப்புடன் சொல்வாள். பேத்தியை வாங்கி மடியில் போட்டபோது உணர்ச்சிவசப்பட்டு தேம்பித்தேம்பி அழுதிருக்கிறார். ஏன் அந்த அழுகை ? பேத்தியின் உருவத்தல் அகாலமாக காலமான தன் முதல் பெண்ணை நினைந்து வந்த சோகம். அந்த அளவிற்கு குழந்தைமனம் படைத்தவர் தாத்தா.
வயிற்றுப்பிழைப்பிற்காக செய்யும் வேலைநிமித்தம் நான் டெல்லியில் செட்டிலாக வேண்டிய சூழ்நிலையில் அவருடைய கடைசி காலத்தில் அருகில் இல்லாமல் போனேன். முதல் பேரனாக இருந்தும் அவருடைய கடைசி யாத்திரையில் அவருக்கும் நெய்பந்தம் ஏந்தி வழிநடத்தவில்லை. இது என் துரதிருஷ்டம். ஆனால் அவர் என்னை மன்னிப்பார், எப்போதும் போல.

3 comments:

Unknown said...

dear anna

the style of your writing is simple and good. all the incidence which u have quoted are new to me and happy that u shared it with us. even though i could feel the pain of yours in the last sentence i could not stop wondering about how u have finished it like a tamil short story.
thanks and bye.

suresh seenu said...

பாலுண்ணா,

'தாத்தாவும் நானும்' என்ற தலைப்பின்கீழ் உன் படைப்பு நமது TRSNCO வலைமனையில் இடம் பெற்றிருப்பதை பார்த்தவுடன் மகிழ்ச்சி கொண்டேன். படித்து முடித்தவுடனேயே இக்கட்டுரையைக் குறித்த என் கருத்துக்களைப் comments folderல் பதிவு செய்து விட வேண்டும் என்று உறுதி பூண்டேன்.

ஆனால் படிக்கத் துவங்கியவுடனேயே உனது 'தாத்தாவும் நானும்' என் எண்ணத்தை எளிதாக முறியடித்து என்னைச் சடுதியில் 'அந்த காலத்துப் திருவல்லிக்கேணி'க்குக்கு கடத்திச் சென்று விட்டது.

முழுக்கட்டுரையும் படித்து முடித்தவுடன் இன்னதென்று சொல்ல முடியாத உணர்ச்சி குவியல் மனதை அழுத்தத் துவங்கியது. உடனேயே கணினியை அணைத்துவிட்டு, கண்களை மூடி ஆத்மார்த்தமாய்
'அந்த காலத்துக்குள்' மீண்டும் புகுந்தேன்.

எத்தனை நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை. இயல்புக்கு வந்த பின்னும் மனதுக்குக்குள் பலவகையான எதிர்மறை உணர்வுகள் un expected combination-ல் கை கோர்த்துக் கொண்டு "துயரமான மகிழ்ச்சி,மகிழ்ச்சியான சங்கடம், சங்கடமான நெகிழ்ச்சி, நெகிழ்ச்சியான உற்சாகம், உற்சாகமான கழிவிரக்கம்" என்று பலவாறாக என்னை ஆக்ரமித்திருந்ததை உணர்ந்தேன்.

இனி நான் எழுதப்போகும் சில பேராகிராஃபுகள் தாத்தாவை மட்டும் முன்னிறுத்தி அமையப்போவதில்லை!

பாலுண்ணா!நாம் எவ்வளவு நல்லவற்றை இழந்திருக்கின்றோம்! இருக்கும் போது எந்த ஒரு விஷயத்தின் பெருமையும் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. அதனை இழந்ததும் தான் அதன் அருமையும் சிறப்பும் சம்மட்டியாய் நம்மைத் தாக்குகின்றது. இது மனிதத்தின் இயல்பாக இருக்கலாம்! ஆனால் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒன்று என எனக்கு இப்போது படுகின்றது. இதோ நான் மாறுவதற்கான முதல் படி!

வரலட்சுமி பெரியம்மாவை பார்த்ததில்லை. உன் தந்தையார் திரு.வைத்தியனாதய்யரிடம் அதிகமாகப் பழகியதும் இல்லை. உன் சித்தி, சகோதரிகளிடம் சகஜமாய் நடந்ததாக நினைவில்லை.
ஆனால் பாலுண்ணா! நீ..என்னில் ஒருவனாய் தான் அந்நாளில் இருந்திருக்கின்றாய். எனது பள்ளி, கல்லூரி நாட்களில் உன் தோழமை, அருகாமை மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை, it seems that I had just taken for granted.

எனக்கும், ரமேஷுக்கும் நீ ஆங்கில இலக்கணம் சொல்லித்தந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. 'would have been'
என்ற சொற்றொடரை எவ்வகையான வாக்கியத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்லித்தந்தவன் நீ! அதற்காக அப்போது உனக்கு நன்றி சொன்னதாக நினைவில்லை! இப்போதேனும் சொல்கிறேன்! thanks balunna!

உனக்கு சென்னையில் ஏதோ முக்கிய வேலையிருந்த போதும், என் அப்பா சொல்லிவிட்டதால் ஒருமுறை நீ என்னை மெலட்டூருக்கு அழைத்து செல்ல நேர்ந்தது உனக்கு நினைவிருக்கலாம்! உனக்கேற்பட்ட இடைஞ்சலுக்காக அன்று நான் உன்னிடம் வருந்தவில்லை. இப்போதேனும் சொல்கிறேன்! sorry balunna!

நீ அப்போதே தமிழில் நல்ல படைப்புகளை படிப்பாய். அழகாகக் கதைகளும் எழுதுவாய்! உன் தமிழ் எனக்குப் பிடிக்கும்! உன் கதையைப் படித்தவுடன் உனக்குப் போட்டியாக நானும் எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் அந்நாளில் இந்த ஊர்க்குருவியும் பருந்தாக முனைந்திருக்கின்றது. ஆனால் ஒன்றை உறுதியாகச் சொல்வேன்! தமிழின் மேல் எனக்கு ஈர்ப்பு ஏற்பட உன்னுடனான போட்டியும் முக்கிய காரணம் என்று அந்நாளில் தெரியவில்லை. ஆனால், இந்த வளைகுடாவில் உள்ள தமிழ் மன்றத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் எனக்கு இப்போது அது நன்றாக புரிகின்றது. அதற்காகவும் என் நன்றி!

தாத்தா பாட்டி இருவருக்கும் நீ செல்லப் பேரனாய் இருந்ததில் சற்று பொறாமை கூட அந்நாளில் எனக்கிருந்திருக்கிறது. புன்சிரிப்புடன் அதை ஒப்புக் கொள்வது எனக்கே சற்று விநோதமாகத்தான் இருக்கிறது!

தாத்தாவும், பாட்டியும்,அவர்கள் காரணமாய் நம் பெற்றோர்களும், உறவினர்களுமாய் அமைந்த நம் trsnco வின் bondage இத்துணை உறுதியாகவும் உணர்வு பூர்வமாகவும் இருந்திருக்கின்றது என்பதை இந்த ப்ளாகில் சென்டினரி கட்டுரைகள் வெளி வரும் வரை நான் பெரிதாக நினைத்துப் பார்த்ததில்லை. இப்போது பெருமையுடன் உணர்கின்றேன்!

இருபது வருடத்துக்கும் மேலாக கால ஓட்டம் நம்மை தள்ளியிருக்கச் செய்து விட்டிருந்தாலும் மனதளவில் ஒன்றாகத் தானிருந்திருக்கின்றோம்!

சாரு மன்னியை நான் பாசத்துடன் நினைத்துக்கொள்ளும் இவ்வேளையில்
உன் காதலும் கல்யாண காலமும் இனிய நினைவுகளாய் மலருகின்றது!

ஆனால்,இந்த இருபதாண்டு காலம் ஏற்படுத்திய பிரும்மாண்டமான பள்ளம் ஒன்று உண்டென்றால் அது வைஷ்ணா, வர்ஷாவிடம் நான் 'சுரேஷ் சித்தப்பா' என்ற வகையில் அன்பைக் காட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான்!

தவிர்த்திருக்க வேண்டிய இவ்விடைவெளி உன்னிடம் என்று மட்டுமில்லை! கிருத்திகா, ரம்யா, ரவி,சிரீராம்,சித்ரா,சுகன்யா,விஜய், உமா சங்கர், நந்து, விவேக் ஆகியோரின் வாழ்க்கை துணையானவர்களிடமும், அவர்தம் குழந்தைகளிடமும் நெருங்கி, நல்ல உறவினனாக உறவு கொள்ளாததற்கும் நிச்சயமாய் வருந்துகின்றேன்! இனி அனைவரிடமும் தொடர்பு வைத்திருக்க உறுதி எடுக்கின்றேன்!

உன் ஆக்கம், அதற்கான ஊக்கத்தை தந்ததற்காக என் நன்றிகள் பல!!

சரி, தொடங்கிய விஷயத்துக்கு வருவோம்! முள்ளங்கி சாம்பாரும், சேகர் ஸ்டோர்ஸ் ஃபோனும் எனக்கும் நினைவிருக்கின்ற்து. 'வேம்பு சித்தி' எபிசோடும் நீ எழுதியிருக்கலாம்!
GS அப்பாவை நீ கடவுள் அனுப்பி வைத்த ரெப்ரசெண்டேட்டிவ் என்ற வகையில் குறிப்பிட்டிருந்ததை படிக்கும் போது என் கண்களில் நீர் முட்டி எழுத்தை மறைத்தது நிஜம்!

நீ எழுதியிருந்தது போல் எனக்கும் தாத்தாவுக்கு இரண்டாம் நெய் பந்தத்தை பிடிக்கக்கூடிய பேறு கிடைக்கவில்லை. உன்னை மன்னித்தது போலவே,தாத்தா என்னையும் மன்னித்து ஆசீர்வதிக்கட்டும்!!

ரெண்டு வரிகள்லே நறுக்கு தெரிச்சா மாதிரி விமர்சனம் எழுத நெனைச்சேன்! ஆனா, என் மனசையே தொறந்து கொட்ட வச்சுடுத்து உன் 'தாத்தாவும் நானும்'.

என்னைப் பொறுத்தவரை அது...
'தாத்தாவும் நாமும்'.

ARUNACHALAM said...

Suresh, Very good. Nithchayamaga namm palavattrai izhandhirukkirom. Nee correctagga solvadhiapol, ippodhu irukkum third generation kuzhandhiagalin mugam (peyarum dhan)kooda ninaiviruppadhu illai. Idhu globalisationnin oru angamaga kooda irukkalam. Sila vizhayangalai nan mattravargal solli ketkavendum ena irukkiren. Nan kojam vasadhiyaga irundhal, ippodhe un iruppidaththukku vandhu, unnai kattipidithhukondiruppen.

ippadikku,
balunna